Wednesday, 8 February 2017

விழித்திடுவீர் நுகர்வோரே!

முனைவர் சி.சதானந்தன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி
அரும்பாக்கம், சென்னை - 106.
பேச 9940190616

விழித்திடுவீர் நுகர்வோரே!

வானம் பார்த்து விதை விதைத்து
மண் புழுவை நண்பனாய்க் கொண்டே
மண்ணிலே கருத்தாய் இயற்கை உரம் தூவி
நாற்று நட்டுக் களையெடுத்து
விளைஞ்ச பொருளையும்;
ஆழி நீரைப் பாத்தி கட்டி
ஆதவன் அருளாலே
காய்ச்சிய உப்பையும் கொடுத்தே
மிளகையும் பொன்னையும்
பண்டமாற்றிய காலம் பொற்காலமாய்ச் சென்றதே!

தன் வயல்ல விளைஞ்சதையும்
தன் தோட்டத்துல விளைஞ்சதையும்
கூடையிலே கொண்டு வந்து கொட்டிட்டு
கொஞ்சம் பணம் வாங்கிச் சென்ற
காலமும் பொற்காலமாய்ச் சென்றதே!

பொற்காலத்திலே விற்றவனும் வாங்கியவனும்
கொஞ்சமுங் குறைவின்றி
வாழ்ந்தனர் ஆராக்கியமாகவே!

பல நாட்டுச் சரக்கு வந்து பாரினில்
பளபளப்புக் காட்டியே
பாசாங்கு வார்த்தைகளால் ஒரு பங்குக்கு
இரண்டு பங்கு இலவசம் என்று
பன்னாட்டுச் சந்தைகள் வந்தனவே!

கட்டுடல் நலம் முக்கியமென்று பார்த்தான் விவசாயி
காசுதான் முக்கியமென்று பார்த்தான் பன்னாட்டுவாசி
இதைச் சற்றே நீயும் யோசி!

பொருட்களை நுகரும் நுகர்வோரே!
பொருட்களைக் கொஞ்சம்
நுகர்ந்து பார்த்தே வாங்கிடுவீரே!

கலியுகத்திலே காசில்லாமல் ஓசியில்தான்
கடைக்காரரும் தந்திடுவாரோ!

ஆடி தள்ளுபடி அமாவாசைத் தள்ளுபடி என்றே
தரத்தைத் தள்ளுபடி செய்து
கலப்படத்தை மிகக் கலந்தே விற்றிடுவார்!
கருத்தாய் நாமும் பொருளின்
காலம் பார்த்தே வாங்கிடுவீர்!

தரமுத்திரைப் பார்த்தால் போதுமென்று தாழ்வாக நினையாதீர்!
தரமுத்திரையாலும் வந்ததே போலி முத்திரை
தரத்தையும் தரமுத்திரையையும் தரமாகக் கவனிப்பீர்!
தரணியில் சுகமாய் வாழ்ந்திடுவீர்!.

No comments:

Post a Comment