Wednesday 8 February 2017

களவு வாழ்வியல்



களவு வாழ்வியல்
முனைவர் சி.சதானந்தன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி)
அரும்பாக்கம், சென்னை - 106.
நுழைவாயில். . .

உலகம் தோன்றிய நாள் முதலாய் உயிர்களிடையே பாலுணர்வு இருந்து வருகின்றது. மனித உயிர்களிடையே பாலுணர்வு தொடர்ந்த காதல் உணர்வும் இருந்து வருகின்றது.  ஆணும் பெண்ணும் எதிர்பாரா வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது அவரவர் அறியாமலேயே கண்கள் கலந்து நாணம் துறந்து காதல் உணர்வும் தோன்ற உள்ளத்தில் வேட்கை கொள்கின்றனர்.  இவ்வேட்கை உணர்வு ஆணையும் பெண்ணையும் அஃதாவது தலைவனையும் தலைவியையும் மீண்டும் மீண்டும் சந்திக்கத் தூண்டுகின்றது.  பிறர் அறியா வண்ணம்  இச்சந்திப்பு நிகழ்வதால் இம்மறைi ஒழுக்கத்தைக் `களவுஎன்னும் சொல்லால் நம் முன்னோர் குறித்துச் சென்றுள்ளனர்.  இக்களவு வாழ்க்கை மாந்தரிடையே இன்ப உணர்வை  ஊட்டுவதாக அமைவதாலும் வாழ்வின் அடிப்படைத் தொடக்கமாய் அமைவதாலும் இக்களவு குறித்துத் தொல்காப்பியம் தொடங்கி இலக்கண நூல்களும் சங்க இலக்கியம் தொடங்கி இலக்கிய நூல்களும் என அனைத்துத் தமிழ்நூல்களும் பரக்கப் பேசுகின்றன.  ``எல்லாப் பொருளும் இதன்பால் உள’’ எனும் பெருமை படைத்த திருக்குறளும் இன்பத்துப்பாலில் களவு குறித்து எழுபது திருக்குறள்களில் விரிவாகப் பேசுகின்றது.  திருக்குறளில் காணப் பெறும் இக்களவியல் கருத்துகளைத் தொல்காப்பியக் களவியல், நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் தரும் களவியல், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய மாறனகப் பொருள் - –களவியல் ஆகியவற்றோடு ஒப்பீட்டு ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

களவு

களவு என்பதற்குத் `திருட்டு’1 என்றும் களவுப் புணர்ச்சி என்பதற்குத் `தலைவனும் தலைவியும் பிறரறியாது தனியிடத்தில் எதிர்ப்பட்டுக் கூடுகை’2 என்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி பொருள் உரைக்கின்றது.  கழகத் தமிழ் அகராதியும் இப்பொருளையே உரைத்து நிற்கின்றது3.  அபிதான சிந்தாமணி `களவுஎன்பதற்கு, ``இது, பிறர்க்குரித் தென்று இருமுதுகுரவராற் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த வுள்ளத்தோடெதிர்ப்பட்டுப் புணர்வது.  இது, பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளும் களவன்று.  இது வேதத்தை மறையென்பது போல்வது’’4 என்று விளக்கம் அளிக்கின்றது.
தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் களவியலுக்கு முன்னுரை வழங்கும் போது, ``களவென்பது அறம் அன்மையின் எனில் அற்றன்று, களவு என்னும் சொல் கண்டுழியெல்லாம் அறப்பாற்படாதென்றல் அமையாது.  களவானது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல் இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும்’’5 என்று விளக்கம் தருகின்றார்.

தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த நச்சினார்க்கினியரும் களவியலுக்கான விளக்கம் தரும் போது கீழ்க்காணும் பாடலை எடுத்துக்காட்டுகிறார்.

``களவெனப் படுவ தியாதென வினவின்
வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காம னன்னோன்
விளையாட் டிடமென வேறுமலைச் சாரன்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடு
மாயமுந் தோழியு மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி யென்மனார் புலவர்’’6

களவு - தொல்காப்பிய வரையறை

தொல்காப்பியப் பொருளதிகாரம் களவியலின் முதல் நூற்பாவில் களவின் இயல்பு குறித்து,

``இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே’’7
                                                             (தொல். பொருள். களவியல். 1)
என்று வரையறுத்துள்ளது. `இன்பம், பொருள், அறன் என்று கூறிய மூவகைப் பொருள்களுள் ஒருவனோடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்போடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எனப்பட்ட காமப் புணர்ச்சியை ஆராயும் பொழுது வேதம் ஓரிடத்துக் கூறிய மணம் எட்டனுள் துறை அமைந்த கந்தருவ மணம் கொள்ளும் ஆணும் பெண்ணும் ஆகியோரின் தன்மையாகும்என்ற விளக்கம் தந்து களவின் இயல்பைத் தொல்காப்பியம் உணர்த்துகின்றார்.

களவு - அகப்பொருள் விளக்கம் வரையறை

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் களவின் இயல்பு குறித்துக் கூறும் போது, `உள்ளம் மகிழ்வதற்குக் காரணமாகிய காதல் வாழ்க்கை அன்பின் ஐந்திணையாகும்.  இது களவு, கற்பு என்னும் இருபிரிவுகளை உடையது.  அவற்றுள் களவு வாழ்க்கையானது, நான்கு வேதத்துள் கூறப்படும் எண்வகை மணங்களுள் யாழோர் கூட்டமாகிய காந்தர்வ மணத்தை ஒத்ததாகும்என்று தொல்காப்பியர் கூறி விதியையே ஒத்துச் செல்கின்றது.

``உளமலி காதல் களவு எனப் படுவது
ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப’’8 (அகப்பொருள் விளக்கம் 117)

ஆக, மேற்கூறிய விளக்கங்கள் யாவும் `ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் பிறர் அறியாமல் மேற்கொள்ளும் காதல் வாழ்க்கையே களவு வாழ்க்கைஎன்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

கைக்கிளை - ஐயம்

தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் சூழலில் தலைவியைக் கண்டவுடன் தலைவியின் அழகில் மயங்கி வேட்கை கொண்ட தலைவன் முதற்கண் ஒருதலைக் காமம் கொள்வான்.  தலைவனின் ஒருதலைக் காமத்தைக் `கைக்கிளைஎன்று இலக்கண நூல்கள் உரைக்கின்றன. இக் கைக்கிளையைக் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிவு என நான்கு வகையாக அகப்பொருள் விளக்கம் பாகுபடுத்துகிறது.

``காட்சிஐயம் துணிவு குறிப்பறிவு என
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை’’9 (அகப்பொருள் விளக்கம் 118)

தலைவன் தலைவி ஆகிய இருவரும் சந்திக்கும் பொழுது தலைவியின் அழகைக் கண்டு தலைவன் ஐயப்படுவானே அன்றி, தலைவி ஐயப்படுதல் மரபில்லை என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.

எய்திய இருவருள் சிறந்த இறைவன் மேற்று
ஐயுறல் என்ப அறிவுடையோரே”10 (மாறனகப் பொருள் - களவியல் 8)

என்னும் மாறனகப் பொருள் நூற்பா தலைவனே ஐயப்படுவான் என்பதைத் தெளிவுற காட்டுகின்றது. தலைவியைக் கண்ட தலைவன் அவன் அழகில் மயங்கி இவள் தெய்வப் பெண்ணோ, மயிலோ, மானிடப் பெண்ணோ என ஐயம் கொள்கின்றான். திருவள்ளுவர் இன்பத்துப்பாலின் முதல் குறளில் தலைவனின் இத்தகு ஐயத்தைப் பதிவு செய்கின்றார்.

``அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
மாதர் கொல்மாலும் என்நெஞ்சு’’11   (குறள் 1081)

தலைவியைக் கண்ட தலைவன், கனமான குழை என்னும் காதணியை அணிந்து நிற்கும் இவள் தெய்வப் பெண்ணோ,  சிறந்த ஒரு மயிலோ, ஒரு மனிதப் பெண்ணோ?  இவளை இன்னவள் என்று அறியமுடியாமல் என் நெஞ்சம் மயங்குகிறதுஎன்று ஐயப்படுவதாகக் காட்டுகின்றார். மேலும் தலைவியின் கண்களைக் கண்ட தலைவன், ‘பெண்மான் போன்ற அழகிய அச்சப்படும் பார்வையையும் நாணத்தையும் இயற்கையாக உடைய இவளுக்கு வேறு அணிகளை உண்டாக்கி அணிவதால் பயனில்லைஎன்று கூறுகின்றான்.

``பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து’’12 (குறள் 1089)

ஐயத்தின் இலக்கணத்தை இத்தகைய தன்மையிலேயே அகப்பொருள் விளக்கமும் வரையறை செய்துள்ளது.

மடமான் நோக்கி வடிவும் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்”13 (அகப்பொருள் விளக்கம் 120)   

இளமையான மானைப் போன்று நோக்கும் தலைவியின் அழகும் அவளைக் கண்ட இடமும் சிறப்புடையதாக அமையும் காலத்துத் தலைவனுக்கு ஐயம் தோன்றுகிறது. மேலும் தலைவியின் கண்கள், தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடன் அமைந்திருப்பதை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்”14  (குறள் 1084)

தம்மைக் காண்பவரின் உயிரை உண்ணுதலால் தலைவியின் கண்களை இயமனோ என்று முதலில் ஐயப்படுகிறான் தலைவன். பின்னர் தலைவியின் கண்களை கூர்ந்து நோக்கி அவை கண்கள் தாம் என்று முடிவு கொள்கின்றான். ஆனால் கண்கள் அலமந்து காண்பதால் அவை பெண்மானோ என்று ஐயம் கொள்கிறானாம் தலைவன். இவ்வாறாக தலைவியின் கண்கள் கூற்றமோ, கண்களோ, பெண்மானோ நான் அறிகிலேன்; இப்பெண்ணின் பார்வையில் இம் மூன்றும் அடங்கியிருக்கின்றன என்று தலைவன் கூறுவதாக திருவள்ளுவர் காட்டுகின்றார்.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து”15 (குறள் 1085)

கைக்கிளை - துணிவு

தலைவியின் எழிலில் மயங்கி பல்வகையில் ஐயப்பட்ட தலைவன் இறுதியில் தலைவியின் தோளிலும் மார்பிலும் ஓவியமாக எழுதிய கொடியும், அவள் அணிந்திருந்த அணிகலன்களும், சூடி வாடியமலரும், பூவைச் சுற்றும் வண்டும், நிற்காமல் அங்கும் இங்கும் நடக்கின்ற கால்களும், பல திசைகளையும் பார்க்கின்ற கண்களும் ஆண்மகனைக் காணும் போது ஏற்படும் அச்சமும் மற்றும் கால் நிலம் தோய்தல், வியர்த்தல், நிழல் வீழ்தல், உடையிலும் ஆடையிலும் மாசுபடல் ஆகிய காரணங்களைக் கொண்டு அவள் பெண்தான் என்று தெளிவடைகின்றான் என்று இலக்கண நூலார் ஐயத்திற்குப் பின்தெளிவு () துணிவுஎன்பதைக் குறித்து இலக்கண வரையறை செய்துள்ளமையைக் கீழ் வரும் பாடல்கள் உணர்த்துகின்றன.

எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும்
கச்சமில் ஐயம் கடிவன ஆகும்” 16 (அகப்பொருள் விளக்கம் 121)

அலமரல் கண்ணிமைப்பு அச்சம் உகக்கும்
மலர்உயிர்ப்பு அதனில் வாடுதல் வெயர்த்தல்
ஒளிர்கலன் வள்ளி வண்டு உடன் நிழலிடுதல்
அடிநிலந் தோய்தர் அவண் நிகழ் ஐயம்
கடிவன ஆகும் காவலன் தனக்கே” 17 (மாறனகப் பொருள் - களவியல் 9)

காதல் குறிப்பறிதல்

தலைவியின் எழிலார் நலன்களைக் கண்ட தலைவன் தனக்கேற்பட்ட காதல் உணர்வு தலைவிக்கும் ஏற்பட்டிருக்குமா என்று மனதில் எண்ணித் தலைவியை நோக்க, தலைவியின் பல்வேறு பட்ட செயல்பாடுகள் தலைவியின் உள்ளத்திலும் காதல் இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைவதைத் தலைவன் காண்கின்றான்.

தலைவி தலைவனை அன்புடன் பார்த்துப் புன்முறுவல் பூத்துத் தலைகுனிந்தாள். அச்செயல் இருவரிடையே அன்பாகிய பயிரை வளர்ப்பதற்கு தலைவி பாய்ச்சிய நீராக அமைந்த தன்மையை,
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்”18 (குறள் 1093)

என்னும் குறள் மூலம் வள்ளுவர் வெளிப்படுத்துகின்றார். தலைவி ஒரு மானிடப் பெண்தான் என்பதை அறிந்த தலைவன் தலைவியைப் புணர்ச்சிக் கூட்டத்திற்கு உடம்படுத்துதலுக்கு இருவரின் பார்வையும் பேசுகின்ற வார்த்தையும் புணர்ச்சிக் கூட்டத்திற்குக் குறிப்புரையாக அமையும் என்பதைத் தொல்காப்பியம்,

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்” 19 (தொல், களவியல், 96)

என்றும், தலைவியின் கண்களே அவள் உள்ளத்தில் தோன்றும் வேட்கையினைத் தலைவனுக்குத் தெளிவு பட உணர்த்திவிடும் என்பதை அகப்பொருள் விளக்கம்,

அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப” 20 (அகப்பொருள் விளக்கம் 122)

என்றும் கூறுகின்றன. திருவள்ளுவரும் தலைவியின் பார்வையும் பேச்சுமே அவளின் காதலைச் சொல்லி விடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.

தலைவியின் மையுண்ட கண்களுக்கு இரண்டு வகையான பார்வைகள் உள்ளன. ஒரு பார்வை நோய் செய்கின்றது. மற்றொரு பார்வை அந்நோய்க்கு மருந்தாக அமைகின்றது என்பதை,
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து” 21 (குறள் 1091)

என்றும், நான் தலைவியைப் பார்க்கும் பொழுது அவள் நிலத்தைப் பார்க்கின்றாள்; நான் பார்க்காத பொழுது அவள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் புரிகின்றாள் என்பதை,

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்” 22 (குறள் 1094)

என்றும், அன்பிற்குரிய தலைவி தம் வேட்கைக்கு உடன்படாது மறுத்தவள் போல் பேசினாலும் அப்பேச்சு மெய்யாகவே உடன்படாப் பேச்சன்று என்பதை உடனுக்குடன் உணர்த்திவிடுகின்றது என்பதை,


உறாஅ தவர்போல் சொலினும், செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்” 23 (குறள் 1096)

என்றும், வெளியே அயலவர் போல் ஒருவரை ஒருவர் பார்த்தல், காதல் உடையவர்களிடத்தில் உள்ள ஓர் இயல்பாகும் என்பதை,

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள” 24 (குறள் 1099)

என்றும் எடுத்துக்காட்டுகின்றார்.

       இவ்வாறு காட்சி, ஐயம், தெளிவு (துணிவு), குறிப்பறிதல் ஆகியனவற்றைத் தொடக்கமாகக் கொண்டு சங்க காலந்தொட்டுகளவு வாழ்வுஎன்றழைக்கப் பெறும் காதல் வாழ்க்கையைத் தமிழர் வாழ்ந்தனர் என்பதை நமக்குக் காட்டும் காலக் கண்ணாடிகளாக மேற்கூறிய இலக்கணங்களும் திருக்குறள் முதலான இலக்கியங்களும் அமைந்துள்ளன என்பதை நிறுவுகின்றதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


அடிக்குறிப்புகள்

1.சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, தொகுதி 2, பதிப்பு 1982, பக்கம் 813.
2.சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, தொகுதி 2, பதிப்பு 1982, பக்கம் 814.
3.கழகத் தமிழ் அகராதி, கழக வெளியீடு, பதிப்பு 1969, பக்கம் 302.
4.. சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, பதிப்பு 2010, பக்கம் 379.
5.தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் - இளம்பூரணர் உரை, கழக வெளியீடு பதிப்பு 1982, பக்கம் 155.
6.தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் - நச்சினார்க்கினியர் உரை, சுன்னாகம், திருமகள் அழுத்தகம், பதிப்பு 1948, பக்கம் 336.
7.மேலது.
8.அகப்பொருள் விளக்கம், களவியல் நூற்பா எண்: 117, கா.ரா.கோவிந்தசாமி முதலியார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 1992, பக்கம் 58.
9.மேலது, நூற்பா எண்: 118, பக்கம் 60.
10.மாறனகப் பொருள் - களவியல், நூற்பா எண் 8, இரா.கண்ணன் உரை, கூத்தன் பதிப்பகம், பதிப்பு 2003, பக்கம் 33.
11.திருக்குறள், இன்பத்துப் பால், தகையணங்குறுத்தல், குறள் எண்: 1081.
12.மேலது, குறள் எண் 1089.
13.அகப்பொருள் விளக்கம், களவியல் நூற்பா எண்: 120, கா.ரா.கோவிந்தசாமி முதலியார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 1992, பக்கம் 61.
14.திருக்குறள், இன்பத்துப் பால், தகையணங்குறுத்தல், குறள் எண்: 1084. 1093) 
15.மேலது, குறள் எண்: 1085.
16.அகப்பொருள் விளக்கம், களவியல் நூற்பா எண்: 121, கா.ரா.கோவிந்தசாமி முதலியார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 1992, பக்கம் 62.
17.மாறனகப் பொருள் - களவியல், நூற்பா எண் 9, இரா.கண்ணன் உரை, கூத்தன் பதிப்பகம், பதிப்பு 2003, பக்கம் 36.
18.திருக்குறள், இன்பத்துப் பால், குறிப்பறிதல், குறள் எண்: 1093. 
19.தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் - நச்சினார்க்கினியர் உரை, சுன்னாகம், திருமகள் அழுத்தகம், பதிப்பு 1948, பக்கம் 346.
20.அகப்பொருள் விளக்கம், களவியல் நூற்பா எண்: 122, கா.ரா.கோவிந்தசாமி முதலியார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 1992, பக்கம் 62.
21.திருக்குறள், இன்பத்துப் பால், குறிப்பறிதல், குறள் எண்: 1091. 
22.மேலது, குறள் எண்: 1094.
23.மேலது, குறள் எண்: 1096.
24.மேலது, குறள் எண்: 1099.

1 comment:

  1. நல்ல ஆய்வு.வாழ்த்துக்கள்

    ReplyDelete