Wednesday, 29 March 2017

முத்துவீரியத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்


முனைவர் சி.சதானந்தன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி)
அரும்பாக்கம், சென்னை - 600 106.
முத்துவீரியத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
முத்துவீரியம்  
தமிழ்மொழியின் அமைப்பையும் தமிழரின் வாழ்வியல் கூறுகளையும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்திலக்கணங்களாகக் கூறும் சிறந்த இலக்கண நூல்களுள் ஒன்று முத்துவீரியமாகும். இந்நூல் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் திரிசிரபுரம் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப் பெற்றது. இதற்குத் திருநெல்வேலி திருப்பாற்கடனாதன் கவிராயர் பொழிப்புரையெழுதியுள்ளார். இந்நூல் முதன்முதலில் 1889 ஆம் ஆண்டு திரு.பழனியாண்டி அவர்களால் சென்னை அல்பீனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் தற்பொழுது கிடைக்கவில்லை. பின்னர் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் திரு. கு.சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கக் குறிப்புகள் சேர்க்கப் பெற்று 1972 ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. இதன் பிறகு இந்நூல் இன்னும் முழுமையாக அச்சு வாகனம் ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துவீரியம் பெரும்பான்மையும் தொல்காப்பியத்தையும் சிறுபான்மை நன்னூலையும் தழுவி எழுதப் பெற்ற நூலாகத் திகழ்கின்றது. முத்துவீரியத்திற்கு முன்னர் ஐந்திலக்கணம் கூறும் நூல்களாக தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன திகழ்கின்றன. முத்துவீரியத்திற்குப் பின்னர் ஐந்திலக்கணம் கூறும் நூல்களாக சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் முதலாயின திகழ்கின்றன.
வேற்றுமைகள் குறித்துத் தொல்காப்பியர் சொல்லதிகாரத்துள் இரண்டு மற்றும் மூன்றாம் இயல்களான வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் ஆகிய இரண்டு இயல்களில் விரிவாகப் பேசுகின்றார். நன்னூலார் சொல்லதிகாரத்துள் பெயரியலில் தொல்காப்பியர் வழிநின்றே பெரும்பான்மையும் உரைக்கின்றார். இவ்வாறே முத்துவீரிய ஆசிரியரும் வேற்றுமைகள் குறித்துச் சொல்லதிகாரத்தில் பெயரியல் பகுதியில் 87 நூற்பாக்களில் வரையறை செய்துள்ளார்.
வேற்றுமை
வேற்றுமை என்றால் என்ன? என்று வினாயெழுப்பிக் கொண்டு தொல்காப்பியத்தை அணுகினால் இதற்கானப் பதிலை “வேற்றுமை தாமே ஏழென மொழிப”1 என்னும் நூற்பாவிற்கு உரைகூற வந்த சேனாவரையர் தருகின்றார். அஃதாவது, “செயப்படு பொருண் முதலாயினவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின”2 என்று விளக்கம் தருகின்றார். தெய்வச்சிலையாரும் இக்கேள்விக்கானப் பதிலை இதே நூற்பாவிற்கு உரைகூறும் போது தருகின்றார். அஃதாவது, “பொருள்களை வேறுபடுத்தினமையாற் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒரு பொருளை யொருகால் வினை முதலாக்கியும், ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகாற் கருவியாக்கியும், கால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நீற்பது ஆக்கியும், ஒரு கால் உடையது ஆக்கியும், ஒரு கால் இடம் ஆக்கியும் இவ்வாறு வேறுபடுத்துவது என்க”3 என்று விரிவாகக் கூறியுள்ளார். இவற்றை உதாரணத்துடன் கண்டால் மேலும் தெளிவாக விளங்கும். உதாரணமாக, ‘இராமன்’ என்னும் பெயர்ச்சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் தன்மை உருபுகளுக்கேற்ப மாறுவதைக் காணலாம்.
(எ-டு)
இராமன் வந்தான்                  - இராமன் எழுவாய்
இராமனைப் பார்த்தான்             - இராமன் செயப்படுபொருள்
இராமனால் கொல்லப்பட்டான்       - இராமன் கருவி
இராமனுக்குக் கொடுத்தான்         - இராமன் ஏற்கும் பொருள்
இராமனின் ஒடிந்த கை             - இராமன் இழக்கும் பொருள்
இராமனது வில்                    - இராமன் உடைமைப் பொருள்
இராமன்கண் வளர்ந்தான்           - இராமன் இடம்
வேற்றுமை என்பதற்குத் தொல்காப்பியருக்குப் பின் வந்த நன்னூலார், ‘பொருள் வேற்றுமை செய்வதே வேற்றுமை’ என்று தெளிவாக நூற்பாவில் பதிவு செய்துள்ளார். முத்துவீரியம், “எல்லாப் பெயரும் வேற்றுமை ஏற்கும்”4 என்று நன்னூல் கூறியவற்றுள் ஒன்றை மட்டும் வழிமொழிந்து செல்கிறது. ஆனால் ‘பொருளை வேறுபடுத்தும்’ என்னும் செய்தியைக் கூறவில்லை. முன்னூலான நன்னூல், ‘வேற்றுமை, பொருள் வேறுபடச் செய்யும்’ என்று தெளிவுறக் காட்டுவதால் முத்துவீரியம் இது குறித்து மீண்டும் உரைக்காமல் விட்டிருக்கலாம்.
       “ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை”5
என்னும் நன்னூல் நூற்பா வேற்றுமை குறித்தான விளக்கத்தைத் தருகிறது.
வேற்றுமை உருபுகள்
பெயர் (எழுவாய்), ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி ஆகிய எட்டும் வேற்றுமை உருபுகளாகும் என்று முத்துவீரியம் முன்னூல்களைப் பொன்னே போல் போற்றி அப்படியே பின்பற்றிச் செல்கிறது.
1. எழுவாய் வேற்றுமை
1. “எழுவாய் உருபு பெயர் தோன்று நிலையே”6 என்று எழுவாய் வேற்றுமைக்கான இலக்கணத்தைத் தொல்காப்பியத்தை அப்படியே மொழிந்து முத்துவீரியம் செல்கிறது.
(எ-டு) இராமன், மனிதன், சிங்கம்
என்றவாறாக உருபும் விளியும் ஏற்காதும் தொக்கி நிற்காதும் வருகின்ற தன்மை எழுவாயாகும்.
2. வியங்கோள், வினைநிலை, வினா, பெயர், பண்பு ஆகிய பொருள் நிலைகளில் எழுவாய் வேற்றுமை அமையும் என்று முத்துவீரியம் கூறுகிறது. தொல்காப்பியம் கூறியுள்ள ‘பொருண்மை சுட்டல்’ என்னும் பொருள் நிலையை முத்துவீரியம் கூறவில்லை.
(எ-டு) இராமன் வாழ்க      - வியங்கோள்
       இராமன் வந்தான்    - வினைநிலை
       இராமன் யார்        - வினா
       இராமன் மகன்       - பெயர்
       இராமன் கரியவன்   - பண்பு
(பொருண்மை சுட்டலுக்கு எடுத்துக்காட்டுக் கூறுவதாயின் ‘இராமன் உள்ளான்’ என்பதைக் கூறலாம்).
3. “ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே”7 “நீயிர் நீவிர் நான் எழுவாய் அலபெறா”8 ஆகிய இவ்விரண்டு நூற்பாக்களும் நன்னூலில் 293,294 ஆம் நூற்பாக்களாக இடம் பெற்றுள்ளன. இதனை அப்படியே அடிபிறழாமல் முத்துவீரிய ஆசிரியர் எடுத்துக் கையாண்டுள்ளார்.

4. நீயிர், நீவிர், நான் ஆகியன எழுவாயல்லாத பிற வேற்றுமை உருபுகளைப் பெறுவதில்லை என்று நன்னூலும் இலக்கண விளக்கமும் முத்துவீரியமும் கூறுகின்றன. தொல்காப்பியர் இது குறித்து எதுவும் கூறவில்லை.  
5. பெயராய் நிற்கின்ற எழுவாய் வேற்றுமை ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனும் ஆறு உருபுகளையும் ஏற்கும் என்று நன்னூலும் இலக்கண விளக்கமும் முத்து வீரியமும் கூறுகின்றன.
       (எ-டு) இராமனை, இராமனொடு, இராமனுக்கு, இராமனின், இராமனது, இராமன்கண்
இச்செய்தியைத் தொல்காப்பியர்,
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க்காகும் இயற்கை வென்ப”9
என்ற நூற்பாவில் தருகின்றார்.
6. “ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே” இதில் வரும் “அவ்வுருபு என்னும் சுட்டு எழுவாய் வேற்றுமையைக் குறிக்கும். அவ்வுருபு என்பதை ஆறாம் வேற்றுமை உருபாக்கி ஆறாம் வேற்றுமை உருபும் ஆறன் உருபுகளையும் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஏற்கும் எனக்கூறி சாத்தனது, சாத்தனதை, சாத்தனதால், சாத்தனதற்கு, சாத்தனதன்கண், சாத்தனதே என எடுத்துக்காட்டுவர் சங்கர நமச்சிவாயர்”10. ஆனால் இதனை ஏற்க இயலாது. ஏனெனில், “வேற்றுமை உருபுகள் யாவும் இடைச்சொற்களாதலால் இடைச்சொல் உருபேற்கும் என்பது பொருந்தாது. ஆதலின், அப்பொருள் பொருந்தாது. ‘சாத்தனதை’ என்பதில் ‘சாத்தனது’ என்பது குறிப்பு வினையாலணையும் பெயர் எனக் கொண்டு பெயர் உருபேற்றதாகக் கொள்ள வேண்டுமே ஒழிய, அது என்னும் உருபு உருபேற்றதாகக் கொள்ளுதல் கூடாது”11.


2. இரண்டாம் வேற்றுமை
       வேற்றுமைகள் எட்டனுள் இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ என்னும் வேற்றுமையாகும். தொல்காப்பியர் காட்டிய வழியிலேயே பின்னால் வந்த அனைத்து இலக்கண ஆசிரியர்களும் வேற்றுமை உருபுகளையும் அதன் வரிசை அமைப்புகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர். தொல்காப்பியர் ‘ஐ’ வேற்றுமை எவ்விடத்து வந்தாலும் தெரிநிலை வினையையும் குறிப்பு வினையையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் என்று கூறியுள்ளார். இவ்விளக்கம் பின்னால் வந்த நன்னூலிலோ, இலக்கண விளக்கத்திலோ, முத்துவீரியத்திலோ இடம்பெறவில்லை.
       தொல்காப்பியர் ‘ஐ’ வேற்றுமை பொருள் தோன்று நிலைகளாக காப்பு முதலாக சிதைத்தல் ஈறாக 28 பொருள்களைப் பட்டியலிட்டு மற்றும் பிற என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் வந்த நன்னூலார் ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு பொருள் நிலைகளை மட்டும் சுட்டி மற்றும் பிற என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறையும் அப்படியே வழி மொழிந்து தொன்னூல் விளக்கம் செல்கின்றது. இலக்கண விளக்க ஆசிரியர் இயற்றல், திரித்தல், எய்தல், திறத்தல் என நான்கு பொருள் நிலை சுட்டி மற்றும் பிற என்று குறிப்பிட்டுள்ளார்.
       முத்துவீரிய ஆசிரியர் முன்னூலாசிரியர் வழி நின்று காப்பு, ஒப்பு, ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், அஞ்சல், உடைமை ஆகிய எட்டுப் பொருள் நிலைகளைக் கூறி மற்றும் இவை போல்வன பிற என்று கூறிச் சென்றுள்ளார். ‘பயனிலை’ என்று நூற்பாவை முடித்துள்ளமையால் இவ்வேற்றுமையைப் பயனிலை வேற்றுமை (அ) செயப்படுபொருள் வேற்றுமை என்று அழைக்கலாம்.
              “காப்பின் ஒப்பின் ஆக்கலின் அழித்தலின்
அடைதலின் நீத்தலின் அஞ்சலின் உடைமையின்
அன்னபிறவும் அதன் பயனிலையே”12
(எ-டு)
காப்பு         - ஊரைக் காத்தல்
ஒப்பு         - மதியை ஒத்த முகம்
ஆக்கல்       - சோற்றை ஆக்கினான்
அழித்தல்     - மரத்தை வெட்டினான்
அடைதல்     - மதுரையை அடைந்தான்
நீத்தல்        - பதவியை நீத்தான்
அஞ்சல்      - கள்வரை அஞ்சுவர்
உடைமை     - பொன்னை உடையவன்.
மூன்றாம் வேற்றுமை
       தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையின் உருபாக ‘ஒடு’ என்பதையும், பொருள் நிலையாக வினைமுதல் (கருத்தா), கருவி ஆகிய இரண்டனையும் தந்துள்ளார். நன்னூலார் மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாக ஆல், ஆன், ஓடு, ஒடு ஆகிய நான்கினையும் பொருள் நிலையாக கருவி, கருத்தா, உடனிகழ்வு ஆகிய மூன்றனையும் கொடுத்துள்ளார். நன்னூலார் கூறியுள்ளனவற்றை அப்படியே பின்பற்றிப் பின்னால் வந்த இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் ஆகிய இலக்கண நூல்கள் செல்கின்றன.
              “ஆல் ஆன் ஓடு ஒடு மூன்றனது உருபே”13
              “கருவி உடனிகழ்வு கருத்தா அதன் பொருள்”14
(எ-டு)
வாளால் வெட்டினான்              - கருவி
ஆசிரியரொடு மாணவன் வந்தான்   - உடனிகழ்வு
அரசனால் கோயில் கட்டப்பட்டது   - கருத்தா
நான்காம் வேற்றுமை
       நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ ஆகும். இதன் பொருள் நிலைகளாக கொடை, பகை, சிறப்பு, காதல், தகுதி, அதுவாதல், முறை, பொருட்டு ஆகிய எட்டனையும் முத்துவீரியம் தந்துள்ளது.
“குவ்வே நான்கனது உருபாகும்மே”15
“கொடை பகை சிறப்பு காதல் தகுதி
அதுவாதல் முறை பொருட்டு அதன்பயனிலையே”16
தொல்காப்பியர் நான்காம் வேற்றுமையான ‘கு’ எப்பொருளாயினும் அதனை ஏற்று நிற்கும் என்று கூறுகின்றார். நச்சினார்க்கினியர், “பிறபொருளும் உளவாயினும் கோடற்பொருள் சிறந்தமையின் எப்பொருளாயினுங் கொள்ளும் என்றார்”17 என்று நான்காம் வேற்றுமைக்கு விளக்கம் தந்துள்ளார். எனவே கொடையாகிய கொடுத்தல் பொருளை இதற்குச் சிறப்பாகக் கூறலாம்.
(எ-டு)
‘அந்தணர்க்குப் பசுவைக் கொடுத்தான்’
       ‘மாணவனுக்கு நூல்பொருள் உரைத்தார்’
இந்நான்காம் வேற்றுமையின் பொருள் பாகுபாடுகளாக அதற்கு வினையுடைமை முதலாக சிறப்பு ஈறாக பத்தனையும் தொல்காப்பியர் கூறிச் சென்றுள்ளார்.
       நன்னூலார் நான்காம் வேற்றுமைக்குக் கூறிய பொருள் நிலைகள் (கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை) ஏழனுள் ‘நட்பு’ எனும் பொருள் நிலை தவிர மீதி ஆறனையும் முத்துவீரியம் பின்பற்றிச் செல்வதோடு சிறப்பு, காதல் ஆகிய இரண்டனையும் சேர்த்து எட்டுப் பொருள்நிலைகளைக் கூறுகின்றது.
(எ-டு)
       கொடை      - இரவலர்க்குப் பொன் கொடுத்தான்
       பகை         - பாம்புக்குக் கருடன் பகை
சிறப்பு               - கல்விக்குத் தெய்வம் வாணி
காதல்               - இராமனுக்குக் காதலி சீதை
தகுதி         - அரசர்க்கு உரியது மணிமுடி
அதுவாதல்    - கடுக்கனுக்குப் பொன்
முறை        - சூரியனுக்கு மகன் கர்ணன்
பொருட்டு     - கூலிக்கு வேலை செய்தான்
இந்நான்காம் வேற்றுமைக்கு உரிய சொல்லுருபுகளாக ‘பொருட்டு, நிமித்தம், ஆக’ எனும் மூன்றனையும் நன்னூலுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளனர். ஆனால் முத்துவீரிய ஆசிரியரோ உரையாசிரியரோ இச்சொல்லுருபுகள் குறித்து முத்துவீரியத்தில் ஏதும் கூறவில்லை.
ஐந்தாம் வேற்றுமை
       ஐந்தாம் வேற்றுமை உருபு இல், இன் என்பதாகும். இவ்வேற்றுமை அச்சம், ஆக்கம், தீர்தல், பற்றுவிடல், நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய எட்டனையும் பொருள் நிலைகளாகக் கொண்டு இயங்கும் என்று முத்துவீரியம் வரையறை தந்துள்ளது.
(எ-டு)
‘அச்சம்       - கள்ளரின் அஞ்சும்
ஆக்கம்       - வாணிகத்தின் ஆயினான்
தீர்தல்               - ஊரில் தீர்ந்தான்
பற்றுவிடல்   - காமத்தில் பற்றுவிட்டான்
நீங்கல்       - மலையின் வீழருவி
ஒப்பு         - காக்கையிற் கரிது களம்பழம்
எல்லை       - மதுரையின் வடக்கு சிதம்பரம்
ஏது          - கல்வியில் பெரியன் கம்பன்’18
என்பதான சான்றுகளை ஐந்தாம் வேற்றுமைக்கு உரையாசிரியர் தந்துள்ளார்.
       நன்னூலார் ஐந்தாம் வேற்றுமையின் பொருள் நிலைகளாக நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய நான்கினை மட்டும் கூறியுள்ளார். நன்னூல் உரையாசிரியர்கள் இவ்வேற்றுமையின் சொல்லுருபுகளாக மேல்நின்று, இருந்து எனும் இரண்டனையும் கூறியுள்ளனர். முத்துவீரியத்தில் இத்தகு சொல்லுருபுகள் குறித்து ஏதும் பேசப்படவில்லை.
       தொல்காப்பியர் ஐந்தாம் வேற்றுமையின் உருபாக ‘இன்’ என்பதை மட்டும் கூறுவதோடு ‘இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள்’ எனும் பொருள் நிலையையும் அப்பொருளின் பாகுபாடுகளாக வண்ணம் முதலாக பற்றுவிடுதல் ஈறாக இருபத்து நான்கினையும் கூறியுள்ளார். இவற்றுள் இடம் பெற்றுள்ளனவற்றையே பின்னால் வந்த நன்னூல் முத்துவீரியம் போன்ற இலக்கண நூல்கள் பின்பற்றிச் செல்கின்றன.


ஆறாம் வேற்றுமை
       ஆறாம் வேற்றுமையின் உருபுகள் ‘அது, ஆது, அ’ எனும் மூன்றுமாகும். ஆறாம் வேற்றுமையின் வருமொழி அஃறிணை ஒருமையாயின் அது, ஆது என்பன உருபுகளாக வரும்; வருமொழி அஃறிணைப் பன்மையாயின் ‘அ’ என்பது உருபாக வரும். பண்பு, உறுப்பு, ஒரு பொருளின் கூட்டம், பல பொருளின் கூட்டம், ஒன்று திரிந்து ஒன்றாதல் முதலியனவாக வரும் தற்கிழமையும்; பொருள், இடம், காலம் முதலியனவாக வரும் பிறிதின் கிழமையும் அவற்றின் பொருள் நிலைகளாம் என்று முத்துவீரியம் தந்துள்ள வரையறை முழுமையாக நன்னூலைப் பின்பற்றி அப்படியே கொடுத்துள்ள வரையறையாகும்.
              “ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு
              அவ்வும் ஆறாவதற்கு உருபாகும்”19               (முத்துவீரியம்)
              “அதன்பொருள் குணம் உறுப்பு ஒன்றன் கூட்டம்
              திரிபின் ஆக்கமொடு பலவின் ஈட்டம்
              ஆந்தற்கிழமையும் பிறிதின் கிழமையும்
              ஆகும் என்மனார் அறிந்திசினோரே”20       (முத்துவீரியம்)
              “ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கமாம் தற்கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே” (நன்னூல் 300)
தற்கிழமை
       தன்னை விட்டுப் பிரிக்க முடியாத பொருளின் சம்பந்தமுடையது தற்கிழமையாகும். பண்பு, உறுப்பு, ஒரு பொருளின் கூட்டம், பல பொருளின் கூட்டம், ஒன்று திரிந்து ஒன்றாதல் ஆகிய ஐந்தும் தற்கிழமைகளாகும்.
(எ-டு)
பண்பு                      - இலையது பசுமை
உறுப்பு                     - குரங்கது வால்
ஒரு பொருளின் கூட்டம்    - நெல்லினது குவியல்
பல பொருளின் கூட்டம்     - பறவைகளது கூட்டம்
ஒன்று திரிந்து ஒன்றாதல்   - மஞ்சளது பொடி, அரிசியது மாவு.
பிறிதின் கிழமை
       தன்னை விட்டுப் பிரிக்கக் கூடிய பொருளின் சம்பந்தமுடையது பிறிதின் கிழமையாகும். பொருள், இடம், காலம் ஆகிய மூன்றும் பிறிதின் கிழமையாகும்.

(எ-டு)
பொருள்      - இராமனது வில்
இடம்         - இராமனது வீடு
காலம்        - இராமனது நாள்
தொல்காப்பியர் ஆறாம் வேற்றுமைக்கு உருபாக அது என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ‘தன்னாலும் பிறிதொன்றாலும் இதனது இது என்பதுபட நிற்கும் கிளவியில் தோன்றும் கிழமையைப் பொருளாக உடைத்து’ என்று பொருள் நிலையைச் சுட்டிச் சென்றுள்ளார்.
ஏழாம் வேற்றுமை
கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, பால், முன், இடை, கடை, தலை, வலம், இடம் ஆகிய பத்தொன்பது உருபுகளும் இவை போல்வன பிறவும் ஏழாம் வேற்றுமை உருபுகளாகும் என்று முத்துவீரியம் வரையறை தந்துள்ளது.
(எ-டு)
1.   கண்   - அரங்கின்கண் ஆடல்
2.   கால்   - ஊர்க்கால் கோவில்
3.   புறம் - ஊர்ப்புறத்துச் சுடுகாடு
4.   அகம் - வீட்டகத்து இருந்தான்
5.   உள்   - வீட்டுள் இருந்தான்
6.   உழை - அவனுழை (அவனிடத்தில்) சென்றான்
7.   கீழ்    - மரத்தின் கீழ் உறங்கினான்
8.   மேல் - மரத்தின் மேல் பறவை
9.   பின்   - அவன்பின் சென்றான்
10.  சார்    - இடச்சார் (இடப்பக்கம்) செல்க
11.  அயல் - ஊர் அயல் (ஊரின் பக்கத்தில்) இருந்த கோயில்
12.  புடை  - மதில் புடை (மதில் பக்கத்தில்) நின்றான்
13.  தேயம் - தலைவி தேயத்துச் (தலைவியிடத்தில்) சென்றான்
14.  முன் - வீட்டின் முன் இருந்தான்
15.  இடை - மக்களிடை வந்தார்
16.  கடை - ஊர்க்கடை (ஊரின் கடைப்பகுதியில்) கோயில்
17.  தலை - நூல் தலை (நூலின் தொடக்கத்தில்) கடவுள் வாழ்த்து
18.  வலம் - கைவலத்து உள்ளது
19.  இடம் - அவனிடம் சென்றான்’21
கண் முதலாக இடம் ஈறாகச் சொல்லப்பட்ட இப்பத்தொன்பதினையும் ஏழாம் வேற்றுமையின் உருபுகள் என்று இளம்பூரணர், நன்னூலார், முத்துவீரிய ஆசிரியரான முத்துவீர உபாத்தியாயர் முதலானோர் கூறுகின்றனர். சேனாவரையர் இதனை மறுத்து உருபின் பொருள்பட வந்த பிற சொற்கள் என்று கூறுகின்றார். தொல்காப்பிரைப் பின்பற்றி மேற்கூறிய 19 உருபுகளை மட்டும் முத்துவீரியம் கூறியுள்ளது. நன்னூலார் 28 உருபுகளைத் தந்துள்ளார். மேற்கூறியனவற்றைக் கூறுவதோடு மட்டுமல்லாமல் ‘வாய், திசை, வயின், முதல், பாடு, அளை, தேம், வழி, உழி, உளி, இல் எனும் உருபுகளையும் இடப்பொருளுக்கான உருபுகளாக நன்னூலார் கூறுகின்றார்.
       ஏழாம் வேற்றுமையின் பொருள்நிலைகள் குறித்து முத்துவீரியம் கூறும்போது, ‘பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறும் தற்கிழமைப் பொருள்களுக்கும் பிறிதின் கிழமைப் பொருள்களுக்கும் இடமாய் நிற்கின்ற உருபேற்ற பெயர்ப் பொருள் வேறுபட்ட அவ் இடப்பொருள் நிலையாம்’ என்று வரையறை தந்துள்ளது.
(எ-டு)
1.   பொருள் -     மணியின்கண் உள்ளது ஒளி                      - தற்கிழமை
பனையின்கண் வாழ்கின்றது பறவை       - பிறிதின் கிழமை
2.   இடம் -       ஊரின்கண் உள்ளது வீடு                  - தற்கிழமை
வானத்தின்கண் பறக்கிறது பறவை         - பிறிதின் கிழமை
3.   காலம் -      நாளின்கண் வந்தது நாழிகை              - தற்கிழமை
வேனிலின்கண் பூத்தது பாதிரி              - பிறிதின் கிழமை
4.   சினை -       கையின்கண் உள்ளது விரல்               - தற்கிழமை
விரலின்கண் உள்ளது மோதிரம்            - பிறிதின் கிழமை
5.   பண்பு -       கறுப்பின்கண் உள்ளது அழகு              - தற்கிழமை
இளமையின்கண் வாய்த்தது செல்வம்      - பிறிதின் கிழமை
6.   தொழில் -    ஆடற்கண் உள்ளது அபிநயம்              - தற்கிழமை
ஆடற்கண் பாடப்பட்டது பாட்டு             - பிறிதின் கிழமை
இப்பொருள் முதல் ஆறையும் நன்னூலைப் பின்பற்றியே முத்துவீரியம் உரைத்துள்ளது.
எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை விளியுருபு வேற்றுமை ஆகும். இவ்வேற்றுமையை 38 நூற்பாக்களில் விரிவாக முத்துவீரியம் எடுத்துரைக்கின்றது. விளியேற்கும் உயிர் ஈறுகளையும் மெய்யீறுகளையும் விளக்கமுற எடுத்துக்காட்டுகிறது. முத்துவீரியம் தரும் விளியுருபு செய்திகளை அதன் உரையாசிரியர் வழிநின்று இங்கே தொகுத்துக் காணலாம்.
1. விளியென்று கூறப்படுவன தம்மையேற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயல்புடையன. இவை விளிகொள் பெயர், விளிகொளாப் பெயர் என இரண்டு வகைப்படும்.
உயிரீறு விளி
1. பெயர்களுள் இ, உ, ஐ, ஓ ஆகிய உயிர்களை ஈறாக உள்ள நான்கு பெயர்களும் உயர்திணையில் அமைந்தால் விளியேற்கும்.
2. விளிக்கும் போது இவற்றுள் ‘இ’ என்பது ‘ஈ’ ஆகவும் ‘ஐ’ என்பது ‘ஆ’ வாகவும் மாறும்.  (எ-டு) நம்பி - நம்பீ, நங்கை - நங்காய். மேலும் உ, ஓ ஆகியன ஏ பெற்று விளிக்கும். (எ-டு) வேந்து - வேந்தே, கோ - கோவே.
3. இதில் உள்ள உகரம் குற்றியலுகரமாக மட்டும் அமையும்.
4. உயர்திணைக்கண் இந்நான்கு உயிர்கள் தவிர பிற உயிர்கள் விளியேலா.
5. அளபெடையில் தன்மாத்திரையில் மிகுந்து ஒலிக்கும் இகர ஈறு பெயர்விளியின்கண் இயல்பாய் ஒலிக்கும். (எ-டு) தோழீஇஇஇஇ.
6. ஐகார இறுதி முறைப்பெயர்க்கண் ஆவோடு விளியேற்று வரும். (எ-டு) அன்னை - அன்னாய்.
7. அண்மைப் பெயர்கள் இயல்பாய் வரும். (எ-டு) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி.
உயர்திணைக்கண் விளியேற்கும் மெய்யீறுகள்
1. உயர்திணைக்கண் ன, ர, ல, ள ஆகிய மெய்யீற்றுப் பெயர்கள் விளியேற்கும். இந்நான்கைத் தவிர ஏனைய மெய்யீறுகள் விளியேலா. (எ-டு) பெண்டிர் - பெண்டிரோ, தம்முன் - தம்முனா.
2. இவற்றுள் ‘அன்’ என்னும் னகர இறுதி ஆவாக மாறும். (எ-டு) சோழன் - சோழா. அண்மை விளிக்கண் அகரமாய் விளிக்கும். (எ-டு) துறைவன் - துறைவ, ஊரன் - ஊர.
3. ‘ஆன்’ என்னும் னகர ஈறு இயல்பாக அமையும். (எ-டு) மலையமான், சேரமான். ‘ஆன்’ பண்புப் பெயராகவும் தொழிற் பெயராகவும் வந்தால் ‘ஆய்’ ஆக மாறும். (எ-டு) கரியான் - கரியாய். வந்தான் - வந்தாய், சென்றான் - சென்றாய்.
4. ‘ஆன்’ ஈற்று அளபெடைப் பெயர் இகர ஈற்று அளபெடையைப் போல மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளிக்கும். (எ-டு) உம்பர்கிழாஅஅஅன்.
5. னகர மெய்யீறு முறைப்பெயராய் வரும் போது ஏகாரம் பெற்று விளிக்கும். (எ-டு) மகனே. ‘யான், அவன், இவன், உவன், யாவன்’ என வரும்போது விளியேலாமல் இயல்பாய் வரும்.
6. ரகர மெய்யீறாகிய ‘ஆர், அர்’ -  ‘ஈர்’ ஆக விளிக்கும். (எ-டு) பார்ப்பார் - பார்ப்பீர், கூத்தர் - கூத்தீர். தொழிற் பெயர் மற்றும் பண்புப் பெயரில் ‘ஈர்’ வுடன் ஏகாரமும் வந்து விளிக்கும். (எ-டு) வந்தார் - வந்தீரே, கரியார் - கரியீரே, இளையர் - இளையீரே.
7. ரகர ஈற்று அளபெடைப் பெயர் இயல்பாய் விளிக்கும். (எ-டு) சிறாஅஅர், மகாஅஅர். அவர், இவர், உவர், யாவர், நீயிர் ஆகியன விளியேலாது இயல்பாய் வரும்.
8. ‘ல, ள’ க்களை ஈறாகிய பெயரீற்று அயல் எழுத்து நீண்டு விளிக்கும். (எ-டு) குருசில் - குருசீல், மக்கள் - மக்காள். ஈற்று அயல் எழுத்து நெட்டெழுத்தாக வந்தால் இயல்பாய் விளிக்கும். (எ-டு) பெண்பால், கோமாள்.
9. ‘ஆள்’ ஈற்றுப் பண்புப் பெயரும் வினைப் பெயரும் ஆயாக விளிக்கும். (எ-டு) கரியாள் - கரியாய், நின்றாள் - நின்றாய்.
10. ளகர ஈற்று முறைப்பெயர் னகர ஈற்று முறைப்பெயர் போலவே ஏகாரம் பெற்று விளிக்கும். (எ-டு) மகள் - மகளே.
11. யாவள், அவள், இவள், உவள் ஆகியன விளியேலாது இயல்பாய் வரும்.
12. ‘ல, ள’ க்கள் ஈறாகிய அளபெடைப் பெயர் நீண்டு விளிக்கும். (எ-டு) உழாஅஅல், கோஒஒள்.
பொதுப்பெயர் விளியேற்கும் தன்மை
மெய்யையும் உயிரையும் ஈறாகிய பொதுப்பெயர் முற்கூறிய உயர்திணை நெறியால் விளியேற்கும். (எ-டு) சாத்தீ, பூண்டே, தந்தாய் எனவும் சாத்தா, கூந்தால், மக்காள் எனவும் சாத்தி, பூண்டு, தந்தை, சாத்த எனவும் அமையும். இவ்வாறு பிறவும் வரும்.
அஃறிணைப் பெயர் விளியேற்கும் தன்மை
       உயிரையும் மெய்யையும் ஈறாகிய அஃறிணைப் பெயரெல்லாம் ஏகாரம் பெற்று விளிக்கும். (எ-டு) மரமே, நரியே, புலியே முதலியன.
அம்ம என்னும் சொல் விளியேற்கும் தன்மை
       அம்ம என்னும் அசைச் சொல் நீட்டமும் விளிக்கும். (எ-டு) அம்மா கொற்றா.
சேய்மைக்கண் விளி
       உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைக்கண்ணும் விளிக்கும் பொழுது சேய்மையில் தத்தம் அளவைக் கடந்து சென்று இசைக்கும். (எ-டு) நம்பீஇஇ, நங்காஅய்.
விளியேலாப் பெயர்கள்
       தமர், நுமர், தமன், நுமன், தமள், நமள், நுமள், நமர் ஆகியன விளியேலாப் பெயர்களாகும்.
முடிபாக . . . . .
       முத்துவீரியத்தில் இடம் பெறும் வேற்றுமை குறித்த கருத்துகள் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் தழுவியே அமைந்துள்ளன. தேவையான சில இடங்களில் தொல்காப்பியத்திலிருந்தும் நன்னூலிலிருந்தும் நூற்பாக்களை அப்படியே எடுத்துக் கையாள்கிறது. சில இடங்களில் சொற்றொடர்கள் முன்பின்னாக அமைந்துள்ளனவே அன்றி கருத்து முழுமையாக ஒத்துச் செல்கின்றது.
       வேற்றுமைகள் குறித்த கருத்துகளை முத்துவீரியம் சொல்லதிகாரப் பெயரியலில் மட்டும் 87 நூற்பாக்களில் தெளிவாகப் பேசுகின்றது. இவை தவிர எழுத்ததிகாரப் புணரியலில் புணர்ச்சி சார்ந்து நான்கு நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
வேற்றுமை உருபுகளையும் அதன் வரிசை அமைப்புகளையும் தொல்காப்பியர் காட்டிய வழியிலேயே பின்னால் வந்த அனைத்து இலக்கண ஆசிரியர்களும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
தொல்காப்பியம் எழுவாய் வேற்றுமையில் கூறியுள்ள ‘பொருண்மை சுட்டல்’ என்னும் பொருள் நிலையை முத்துவீரியம் கூறவில்லை.
தொல்காப்பியர் ‘ஐ’ வேற்றுமை எவ்விடத்து வந்தாலும் தெரிநிலை வினையையும் குறிப்பு வினையையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் என்று கூறியுள்ளார். இவ்விளக்கம் பின்னால் வந்த நன்னூலிலோ, இலக்கண விளக்கத்திலோ, முத்துவீரியத்திலோ இடம்பெறவில்லை.
தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையின் உருபாக ‘ஒடு’ என்பதையும், பொருள் நிலையாக வினைமுதல் (கருத்தா), கருவி ஆகிய இரண்டனையும் தந்துள்ளார். நன்னூல் வழி நின்று முத்துவீரியம் மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாக ஆல், ஆன், ஓடு, ஒடு ஆகிய நான்கினையும் பொருள் நிலையாக கருவி, கருத்தா, உடனிகழ்வு ஆகிய மூன்றனையும் கொடுத்துள்ளது.
நன்னூலார் நான்காம் வேற்றுமைக்குக் கூறிய பொருள் நிலைகள் (கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை) ஏழனுள் ‘நட்பு’ எனும் பொருள் நிலை தவிர மீதி ஆறனையும் முத்துவீரியம் பின்பற்றிச் செல்வதோடு சிறப்பு, காதல் ஆகிய இரண்டனையும் சேர்த்து எட்டுப் பொருள்நிலைகளைக் கூறுகின்றது.
நான்காம் வேற்றுமைக்கு உரிய சொல்லுருபுகளாக ‘பொருட்டு, நிமித்தம், ஆக’ எனும் மூன்றனையும் நன்னூலுக்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளனர். ஆனால் முத்துவீரிய ஆசிரியரோ உரையாசிரியரோ இச்சொல்லுருபுகள் குறித்து முத்துவீரியத்தில் ஏதும் கூறவில்லை.
ஐந்தாம் வேற்றுமையின் பொருள் நிலைகளாக அச்சம், ஆக்கம், தீர்தல், பற்றுவிடல், நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய எட்டனையும் முத்துவீரியம் தந்துள்ளது. நன்னூலார் ஐந்தாம் வேற்றுமையின் பொருள் நிலைகளாக நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய நான்கினை மட்டும் கூறியுள்ளார். நன்னூல் உரையாசிரியர்கள் இவ்வேற்றுமையின் சொல்லுருபுகளாக மேல்நின்று, இருந்து எனும் இரண்டனையும் கூறியுள்ளனர். முத்துவீரியத்தில் இத்தகு சொல்லுருபுகள் குறித்து ஏதும் பேசப்படவில்லை.
ஆறாம் வேற்றுமையின் உருபுகள் ‘அது, ஆது, அ’ எனும் மூன்றுமாகும். ஆறாம் வேற்றுமையின் வருமொழி அஃறிணை ஒருமையாயின் அது, ஆது என்பன உருபுகளாக வரும்; வருமொழி அஃறிணைப் பன்மையாயின் ‘அ’ என்பது உருபாக வரும். பண்பு, உறுப்பு, ஒரு பொருளின் கூட்டம், பல பொருளின் கூட்டம், ஒன்று திரிந்து ஒன்றாதல் முதலியனவாக வரும் தற்கிழமையும்; பொருள், இடம், காலம் முதலியனவாக வரும் பிறிதின் கிழமையும் அவற்றின் பொருள் நிலைகளாம் என்று முத்துவீரியம் தந்துள்ள வரையறை முழுமையாக நன்னூலைப் பின்பற்றி அப்படியே கொடுத்துள்ள வரையறையாகும். 
கண் முதலாக இடம் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பதினையும் ஏழாம் வேற்றுமையின் உருபுகள் என்று இளம்பூரணர், நன்னூலார், முத்துவீரிய ஆசிரியரான முத்துவீர உபாத்தியாயர் முதலானோர் கூறுகின்றனர். சேனாவரையர் இதனை மறுத்து உருபின் பொருள்பட வந்த பிற சொற்கள் என்று கூறுகின்றார். தொல்காப்பிரைப் பின்பற்றி 19 உருபுகளை மட்டும் முத்துவீரியம் கூறியுள்ளது. தொல்காப்பியம் கூறியவற்றோடு நில்லாமல் ‘வாய், திசை, வயின், முதல், பாடு, அளை, தேம், வழி, உழி, உளி, இல் எனும் உருபுகளையும் இடப்பொருளுக்கான உருபுகளாகச் சேர்த்து நன்னூலார் 28 உருபுகளைத் தந்துள்ளார்.
தொல்காப்பியர் விளி வேற்றுமையைத் தனியாக ஓர் இயலாக ‘விளிமரபு’ என்று அமைத்துக் கூறியுள்ள செய்திகளைப் பின்பற்றி முத்துவீரியம் விளிவேற்றுமை குறித்து விளக்கம் தந்துள்ளது.
முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றுவம் என்பதற்கிணங்க முத்துவீரியம் வேற்றுமைகள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கின்றது.
அடிக்குறிப்புகள்
1.   தொல்., சொல்., வேற்றுமையியல், நூ. 62.
2.   தொல்., சொல்., சேனாவரையர் உரை, ப. 52
3.   தொல். சொல். தெய்வச்சிலையார் உரை, ப. 48
4.   முத்துவீரியம், பெயரியல், நூ. 506
5.   நன்னூல், சொல்., பெயரியல், நூ. 291
6.   மேலது, நூ. 511
7.   மேலது, நூ. 509
8.   மேலது, நூ. 510
9.   தொல்., சொல்., வேற்றுமையியல், நூ. 69.
10.  முத்துவீரியம், பெயரியல், திருப்பாற்கடனாதன் (உ.ஆ.), ப.140
11.  நன்னூல், கோ.வில்வபதி (உ.ஆ.), ப.334
12.  முத்துவீரியம், பெயரியல், நூ.514
13.  மேலது, நூ. 515
14.  மேலது, நூ. 516
15.  மேலது, நூ. 517
16.  மேலது, நூ. 518
17.  தொல். சொல். நச்சினார்க்கினயர் உரை, ப. 64
18.  முத்துவீரியம், பெயரியல், திருப்பாற்கடனாதன் (உ.ஆ.), ப.143
19.  மேலது, நூ. 521
20.  மேலது, நூ. 522
21.  தொல்காப்பியரின் சொல்லிலக்கணக் கோட்பாடுகள், மு. ஹம்ஸா, பக். 31 - 32.
துணை நின்ற நூல்கள்
1.   முத்துவீரியம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), கழக வெளியீடு, சென்னை - 01, பதிப்பு 1972.
2.   தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, கழக வெளியீடு, சென்னை -1, பதிப்பு 1974
3.   தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையார் உரை, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், பதிப்பு 1984.
4.   நன்னூல் மூலமும் உரையும், புலவர் கோ. வில்வபதி (உ.ஆ.) பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 14, பதிப்பு 2003.
5.   நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், ஆறுமுகநாவலர், முல்லை நிலையம், சென்னை - 17, பதிப்பு ஜூலை 1992.
6.   தமிழ் இலக்கண நூல்கள், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ.), மெய்யப்பன் பதிப்பகம், சென்னை - 108, பதிப்பு 2007.
7.   ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை - 1, பதிப்பு 1984.
8.   தொல்காப்பியரின் சொல்லிலக்கணக் கோட்பாடுகள், டாக்டர் மு.ஹம்ஸா, ராபியா பதிப்பகம், சேலையூர், சென்னை - 73, பதிப்பு திசம்பர் 2002.

No comments:

Post a Comment