Tuesday, 22 March 2016

வள்ளலாரின் கொல்லா நெறி



வள்ளலாரின் கொல்லா நெறி
முனைவர் சி.சதானந்தன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
து.கோ.வைணவக் கல்லூரி (தன்னாட்சி)
அரும்பாக்கம், சென்னை – 600 106.
பேச 9600924858
நுழைவாயில். . . 
 .
உலகில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் ஒழுக்க நெறியிலும் இரக்கங் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் முதன்மையான இடம் வகிப்பது தமிழினமே ஆகும். எவ்வாறெனில் தமிழினம் பேசும் மொழியாகிய தமிழ்மொழி தம்மக்களை இத்தகு சிறந்த பாதையில் செல்ல வழிவகுத்துள்ளது. உலகமொழிகளுள் தமிழ்மொழிக்கு மட்டும் தான் ‘பக்திமொழி’ என்றொரு பெயரும் உண்டு. மொழி வேறு, பக்தி வேறு என்று பிரிக்க இயலாத வகையில் மொழியும் பக்தியும் தமிழ்மொழியிலேயே பின்னிப் பிணைந்துள்ளன. இப்பிணைப்புக்குக் காரணம் தமிழரின் வாழ்வியல் பக்தியோடு இரண்டறக் கலந்திருப்பதே ஆகும். உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்று உலக மதங்களெல்லாம் ஒருங்கே கூறிடினும் இந்து மதம், சமண மதம், பௌத்த மதம் ஆகிய மதங்களே உயிர்க்கொலை புரியாமையைப் பெரிதும் வலியுறுத்துகின்றன. இம்மூன்றனுள்ளும் இந்து மதம் மட்டுமே தனிப்பெருஞ் சிறப்புடன் உயிர்க்கொல்லாமையுடன் உயிர் இரக்கம், உயிர்களிடத்தில் அன்பு காட்டல், ஆண்களும் பெண்களும் இணைந்த நிலையிலான இல்லற விருந்தோம்பல் வாழ்வியல் முதலானவற்றை நெறியாகக் கொண்டிலங்குகின்றது.

      இத்தகு நெறிகளை இந்து மதத்தில் தோன்றிய அடியவர்கள் உலக மக்களிடையே பரப்பி நிலைநிறுத்த அரும்பாடுபட்டனர். இந்த ‘வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில்’ ஒருவராக வந்தவரே ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என்று அன்போடு அழைக்கப் பெறும் ‘இராமலிங்க அடிகள்’ ஆவார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று புல், பூண்டு முதலிய ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை உயிரிரக்கம் காட்டிக் கொல்லா நெறியைப் பின்பற்றி, உலக மக்களையும் பின்பற்ற வலியுறுத்திச் சங்கம் அமைத்துத் தொண்டாற்றினார். அவர்தம் திருவருட்பாவில் ‘கொல்லாநெறி’ மிகப் பரந்த அளவில் காணப்படுகிறது. கட்டுரையின் எல்லை கருதி வள்ளலாரின் சில பாக்களுள் காணப்படும் கொல்லா நெறியை மட்டும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

உயிர் பலியிடல் மரபு 

        பண்டைய நாளில் தமிழகத்தில் வாழ்ந்த தறுகண்மை மிக்க பெருவீரர்கள் போரில் வெற்றி பெறுதல் பொருட்டு அவிப்பலியாகத் தம் உயிரையே கொடுத்துக் கொற்றவையை வழிபட்டனர் என்பது வரலாற்றுச் செய்தியாகும். இவ்வழக்கம் பிற்காலத்தில் தம் உயிரைத் தருவதற்கு அஞ்சி மாற்றுப் பலியாக ஆடு, கோழி, எருமை முதலியனவற்றைப் பலியிடல் என்று மாறியது. இவ்வழக்கம் தாம் விரும்பிய காரியம் நிறைவேற வேண்டித் தம்முயிர்க்கு ஈடாக ஆடு, கோழியைப் பலியிடல் என மாறித் தெய்வத்துக்குப் பலியிடப்பட்ட உயிருடம்பின் ஊனினை நிவேதனப் பொருளாகக் கொண்டு புலால் உண்ணும் பழக்கமும் நாளடைவில் மிகுதிப்படுவதாயிற்று (திருவருட்பாச் சிந்தனை, க.வெள்ளை வாரணனார், ப.134). 

      தெய்வ வழிபாட்டில் சிற்றுயிர்களைக் கொன்று பலியிடுதலாகிய இச்செயல், மக்களது பகுத்தறிவுக்கும் எல்லாவுயிர்களிடத்தும் நிறைந்திருக்கும் இறைவனது திருவருட் குறிப்பிற்கும் ஏலாத மூடப்பழக்கமென்பதனை அருளாளர் அனைவரும் நன்குணர்வர். 

பலியிடலைக் கண்டு அஞ்சல் 

      எல்லாமாகிய பரம்பொருளை விடுத்துச் சிறுதெய்வங்கள் பல நாட்டி மக்கள் உயிர்பலியிடுதலைக் கண்டு வள்ளலார் இரக்கங்கொண்டார். இம்மக்கள் செய்யும் பாதகச் செயலைக் கண்டு அஞ்சினார். இவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்று வேதனை கொண்டார். சிறுதெய்வங்களுக்குப் பலியிடுவதற்கென ஆடு, கோழி முதலியவற்றை ஆரவாரத்துடன் கொண்டு செல்லும் கொடுமையைக் கண்ட இராமலிங்க அடிகளார் புந்தி நொந்து உளம் நடுக்குற்றார். இத்தகைய தீமைக்குச் சார்பாக அமைந்த சிறுதெய்வக் கோயில்களைக் கண்ட காலத்திலும் அவற்றிற்கு அஞ்சி விலகினார். இதனை, 

      ‘நலிதரும் சிறிய தெய்வமென்று ஐயோ
            நாட்டிலே பலபெயர் நாட்டிப்
      பலிதரும் ஆடு பன்றி குக்குடங்கள்
            பலிக்கடா முதலிய உயிரைப்
      பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
            புந்தி நொந்துளம் நடுக்குற்றேன்
      கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
            கண்ட காலத்திலும் பயந்தேன்’
(பிள்ளைப்பெரு விண்ணப்பம் 63)
என்னும் பாடலின் வழி பதிவு செய்கின்றார். மேலும் பிற உயிர்களைப் பலியிடல் என்னும் பெயரில் கொல்லும் போதெல்லாம் தான் பயந்து நடுங்கியது தந்தையே நீ அறிந்ததுதானே! அவ்வாறிருக்க இத்தகு கொடுமைகள் நடவா வண்ணம் அருள்புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்.
      
      ‘துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
            தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
      கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
            கண்ட காலத்திலும் பயந்தேன்
      மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
            வகைகளும் கண்டபோ தெல்லாம்
      எண்ணிஎன் னுள்ளம் நடுங்கிய வதனை
            எந்நெறிநின் திருவுள மறியும்’
                                                (பிள்ளைப்பெரு விண்ணப்பம் 64)

கொல்லாமையும் புலாலுண்ணாமையும் 

      மனித உடலைப் பேணுவதற்குக் காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்கள் போன்றனவை இருக்க, பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனினை உணவாகக் கொள்ள விரும்புவது தன் உடம்பினை வீங்கச் செய்தலாகும். தன் உடம்பைப் பெருக்கப் பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்பவன் ‘அருள்’ என்னும் பண்பினைப் பெறுதல் இயலாது. 

      ‘தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
      எங்ஙனம் ஆளும் அருள்’                                      (குறள் 251)
என்றும்,
      ‘உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
      புண்ண துணர்வார்ப் பெறின்’                                   (குறள் 257)
என்றும் திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கடிந்துரைக்கின்றார். 

      சான்றோர் பலரும் உயிர்ப்பலியையும் புலாலுணவினையும் தீயன என விலக்கிய நிலையிலும் இத்தீமைகள் பழக்கங்காரணமாக நம் நாட்டில் மக்களிடையே தொடர்ந்து வருதல் கண்டு அருளாளர் பலரும் மனம் வருந்தியுள்ளனர். 

      ‘கொல்லா விரதமொன்று கொண்டோரே நல்லோர் மற்று
      அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே’
(பராபரக்கண்ணி 192)
எனவும்,
      ‘கொல்லா விரதங்குவலய மெல்லா மோங்க
      எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே’
(பராபரக்கண்ணி 54) 

எனவும் தாயுமானப் பெருந்தகையார் நெஞ்சம் நெகிழ்ந்து உரைக்கும் வாய்மொழிகள் எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் அருளுடைய மெய்யடியார்கள் உள்ளத்திலே நிலைபெற்றுள்ள உயிரிரக்கப் பண்பு நன்கு புலப்படுத்தலைக் காணமுடிகிறது. 

      புலால் உண்ணும் கருத்துடையோர் சிறந்த கல்வியும் உலகம் வியந்து போற்றத்தக்க அற்புதச் செயலும் பேரறிவும் பேராற்றலும் பெற்று விளங்கினாலும் அன்னார் மெய்யுணர்வுடைய ஞானிகளாக மதிக்கத்தக்கவர் அல்லர் என்பது அருட்பிரகாச வள்ளலாரது திருவுள்ளக் கருத்தாகும். இக்கருத்தினை வள்ளலார் தம் குருவின் மேலும், தம்மை ஆட்கொண்டருளிய இறைவன் மேலும் ஆணையிட்டுக் கூறுகின்றார். 

      ‘மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
            கண்விழித்து வயங்கும் அப்பெண்
      உருவானை உருவாக்கி இறந்தவரை
            எழுப்புகின்ற உறுவ னேனும்
      கருவாணை யுற இரங்காது உயிருடம்பைக்
            கடிந்துண்ணுங் கருத்தனேல் எம்
      குருவாணை எமது சிவக்கொழுந்தாணை
            ஞானியெனக் கூறொணாதே’.
(திருவருட்பா 3027) 

என்பது வள்ளலார் கூறும் ஆணை மொழியாகும். ‘தன்னிடத்தில் வந்த ஆண்மகனைப் பெண்ணாக மாற்றிக் கண்மூடித் திறப்பதற்குள் அப்பெண்ணை அழகிய ஆணுருவாக மாற்றவும், இறந்தோர்களை உயிர்பெற்றெழுமாறு செய்யவும் வல்ல அற்புதச் சித்தித்திறம் பெற்ற முனிவனாயினும், உயிரின்பால் சிறிதும் இரக்கமின்றிக் கரிய இரும்பினாலாகிய வாளினால் நையும்படி அவ்வுயிரின் உடம்பைத் தடிந்து உண்ணுங் கருத்துடையவனாயின் அத்தகைய இரக்கமற்ற கொடிய நெஞ்சினனாகிய அவனை ஞானியெனக் கூறுதல் ஒண்ணாது என்பதனை, தன் குருவின் மேலும் தன்னுயிர்க்கு உயிரான தெய்வமாகிய சிவபரம்பொருளின் மேலும் ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்’ என்று வள்ளல் பெருமான் கூறுகின்றார்.

எவ்வுயிரும் தம்முயிர் 

      உயிர்க்கொல்லாமையைக் கடைப்பிடிப்பதற்கு உயிர்களிடத்தில் இரக்கங் கொள்ளுதல் என்பது முதல் நிலையாகும். அடுத்த நிலை எல்லா உயிர்களையும் தம்முயிராகக் கருதும் நிலையாகும். எல்லா உயிர்களையும் தம்முயிர்களாகக் கருதும் உள்ளம் வந்தால் உயிர்க்கொலை என்பது எழாது. எல்லா உயிர்களும் இன்பத்தில் திளைக்கத் தாம் செய்ய வேண்டியன யாவை என்ற சிந்தை உருவாகும். இத்தகு சிந்தை கொண்டதாலேயே வள்ளற் பெருமான், ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ’ இறைவனை வேண்டுகிறார். 

      ‘எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
            எண்ணிநல் இன்புறச் செயவும்
      அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை
            அகற்றியே அச்சம்நீக் கிடவும்
      செவ்வையுற்று உனது திருப்பதம் பாடிச்
            சிவசிவ என்றுகூத் தாடி
      ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே
            ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்’
(பிள்ளைச் சிறு விண்ணப்பம் 18)

உலகிலே படைக்கப்பட்ட எந்த வகையான உயிரினத்தையும் என் ஆருயிரென்றே கருதி அவற்றையெல்லாம் இன்புற்று வாழச்செய்யவும், அந்த உயிர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளையும் துன்பங்களையும் நீக்கி அவற்றை அச்சமின்றி வாழச்செய்யவும் எனக்கு ஆர்வம் உள்ளது. இன்னும், நான் தூய்மையும் அன்பும் கொண்டு செம்மையாகி உனது திருவடியொளியைப் பாடியுருகி, சிவசிவ என்றே சொல்லிக் கூத்தாடிப் பொருந்தும் களிப்பாலே அழிவுறாமல் இவ்வுலகிலே நிலைத்து ஓங்கி வாழவும் மிகு விருப்பமாகவுள்ளேன். இவ்விருப்பங்களை எந்தையே! இறைவா! நிறைவேற்றுவாய்’ என்று வள்ளலார் வேண்டுகிறார்.

முடிவாக. . . . 

      உலக மதங்களில் தொன்மையும் பெருமையும் உடைய இந்துமதம் பக்தி நெறியில் தழைத்தோங்கக் காரணமாக விளங்கியது தமிழ்மொழியாகும். ‘பக்திமொழி’ என்றழைக்கப்படும் அளவிற்குத் தமிழ்மொழியில் அளவிறந்த பக்தி இலக்கியங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இப்பக்தி இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலோடு இணைந்திருக்கின்றன. மக்கள் செம்மாந்து வாழ இப்பக்தி இலக்கியங்கள் பல நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளன. அந்நெறி முறைகளுள் ஒன்றே கொல்லா நெறியாகும். இக்கொல்லா நெறியை இறையடியவர்களும் சான்றோர்களும் மிகுதியாக வலியுறுத்தியுள்ளனர். இதன்கண் வள்ளலார் கொல்லா நெறியை வலியுறுத்திய பான்மை காட்டப் பெற்றது. வள்ளலார் காட்டிய கொல்லா நெறியில் நம் வாழ்வை நடத்தி உலகம் தழைக்க வழி செய்வோம்.    

1 comment:

  1. அருமை. கணினிச் சான்றிதழ் வகுப்பில் வாசிக்கப்பட்டது

    ReplyDelete